வட்டியும் முதலும்: பசி – ஆனந்த விகடன் – 17/08/2011 – By – ராஜீமுருகன்


ஆனந்த விகடன் – 17/08/2011 – வட்டியும் முதலும் – ராஜீமுருகன்

ஓவியங்கள்: ஹாசிப்கான்

பசிதான் மானுடத்தின் பொது மொழி!

அது… சோழ நாட்டு விவசாயியை, துபாய் ஷேக்கின் ஆறாவது மனைவியின் பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க அனுப்புகிறது. மேகாலயா சப்பை மூக்குப் பெண்ணை, வடபழனி சிம்ரன்ஸ் ஆப்பம் ரெஸ்டாரென்ட்டில் தட்டு கழுவிவிடுகிறது. சில வெள்ளிகளுக்கு கடைசி விருந்தில் கர்த்தரைக் காட்டிக் கொடுக்கிறது. அஞ்சாறு வயசுத் தளிர்களை சிக்னலில் நின்று ரைம்ஸ் புத்தகம் விற்கச் சொல்கிறது. விஜய்க்கும் அஜீத்துக்கும் டூப் போட்டு, மூணாவது மாடியில் இருந்து தள்ளி, காலை உடைக்கிறது. டீச்சர் சாயலில் இருப்பவளை, செம்மொழிப் பூங்கா வாசலில் அம்பதுக்கும் நூறுக்கும் ஆள் பிடிக்க அலைக்கழிக்கிறது. உறவு வீடுகளிலேயே திருடவைக்கிறது. சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் கிட்னிக்கு ஆள் பிடிக்கவிடுகிறது.

பசி… காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்!

எங்கள் ஊரில் ஒரு தம்பதி 30 வருடங்கள் ஒரே வீட்டில் பேசிக்கொள்ளாமல், தனித்தனி அடுப்பில் சமைத்து, தனித்தனியே சாப்பிட்டு வாழ்ந்தார்கள். மூன்று பெண் பிள்ளைகளையும் ஓர் ஆண் பிள்ளையையும் கட்டிக்கொடுத்து அனுப்பிவிட்டு, இப்படி ஒரு வாழ்க்கை. ஏதோ ஒரு பசிப் பொழுதில் சாப்பாடு போட்டுவிட்டு மனைவி சொன்ன சொல்… அந்த மனுஷனுக்குத் தாங்கவில்லை. செருவாடாகச் சேர்த்துவைத்த பொம்பளை கோபம் பொசுக்கென்று அவிழந்தபோது, ஆம்பளைக்குத் தாங்கவில்லை. 30 வருடங்கள் தனித்து, பசித்து, உண்டு, உறங்கும் வாழ்க்கையை ஒரு சொல் உருவாக்கியது எப்படி?

இருவரில் கணவர்தான் முதலில் செத்துப்போனார். அவர் கருமாதியில் கறிச் சோறு சாப்பிட்டுவிட்டு கொல்லைக்குக் கை கழுவப் போகும்போது, பின்கட்டில் இலை நிரம்பிய படையல் சாப்பாட்டை வெறித்துப் பார்த்தபடி அந்த அம்மா உட்கார்ந்து இருந்ததும்… பக்கத்தில் கருப்பு-வெள்ளை புகைப்படத்தில் அவர் ஈட்டி மீசையோடு புன்னகைத்ததும்… இப்போதும் முடிவற்ற நினைவுகளை நோக்கித் தள்ளுகிறது.

பசி என்றால்… வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா? இல்லை. பசி உருவாக்கும் புன்னகையும்,

துயரமும், நன்றியும், துரோகமும், காற்றைப்போல எங்கெங்கும் நிறைந்துகிடக்கின்றன!

மானுடத்தின் பொது மொழி பசி என்றால், பசியின் மொழி எது?

பசியின் மொழி கண்ணீர் என்பதை உலகுக்கு அறிவித்தபடிதான் பிறக்கின்றன ஒவ்வோர் உயிரும். “உனது பசியை நான் உண்ர்ந்துகொள்கிறேன்” என்ற தாய்மையின் கருணையில்தான் தொடங்குகிறது ஒவ்வொருவருக்குமான உலகம். ஆனாலும், ஏன் பிறர் பசியை பலர் உணர மறுக்கிறோம்?

சென்னை வந்த புதிதில் ஒருமுறை ஊருக்குப் போய்விட்டு ரயிலில் திரும்பினேன். அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கி பஸ் ஸ்டாண்டுக்குத் தண்டவாளம் வழியாக இருட்டில் நடக்கையில், திடீரென ஓர் உருவம் முன் வந்து நின்றது. கத்தியை எடுத்து முகத்துக்கு நேராக ஆட்டினான். “துட்ட எடு… ம்ம்…”

இருந்த 120 ரூபாயையும் எடுத்துக் கொடுத்தேன். பேக்கில் இருந்த 2 செட் பேன்ட்-சட்டை, 200 ரூபாய்க்கு வாங்கிய எலெக்ட்ரானிக் வாட்ச் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டான். “திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இரு…” என்று முதுகில் கைவைத்துத் தள்ளிவிட்டான். பயத்தில் இருந்த நான் திரும்பிக் கொஞ்ச தூரம் நடந்தபோது, அவனே கூப்பிட்டான்.

“அலோ… அலோ…”

“சத்தியமா எங்கிட்ட வேற ஒண்ணும் இல்லைங்க…”

“இந்தா, இதுல 20 ரூவா இருக்கு. காலைல டிபன் பண்ணிக்க… சாப்புடாம சாபம் வுட்டா, எம் பொழப்பு நாறிடும்.”

நிச்சயமாக அவன் வாழ்க்கையில் பசியை அதி தீவிரமாக உணர்ந்தவனாக இருப்பான். குடல் சுருங்கித் துடித்து ஒரு வேளை சோற்றுக்கு செத்துச் சுண்ணாம்பாகி இருப்பான்.

இப்போதும் ஒரு வேளை சாப்பாடு மட்டுமே இலக்காக, வாழ்க்கையாக எத்தனை பேர் அலைகிறார்கள். முருகன் கோயில் வாசலிலும் சாய்பாபா கோயில் திண்டிலும் சாப்பிட்டு முடித்த நிம்மதியில் எத்தனை பேர், எவ்வளவு நிம்மதியாகத் தூங்குகிறார்கள். “பாய்ஸ்” பட செந்தில் மாதிரி என்னென்ன இடங்களில் என்ன என்ன சாப்பாடு கிடைக்கும் என கேட்லாக் போட்டுக்கொண்டு எவ்வளவு பேர் வாழ்கிறார்கள். பிறந்த நாளைக்கும் கல்யாண நாளைக்கும் வசதியானவர்கள் போடும் அன்ன தானத்தில் வயிறு கழுவிக்கொள்பவர்கள் எவ்வளவு போ். கையில் காசே இல்லாத கடும் பசித் தருணங்களில், அக்கம் பக்கத்துக் கல்யாண மண்டபங்களில் கேசரியோடு டிபனோ, ஐஸ்க்ரீமோடு விருந்தோ, நானும் ருசித்தது உண்டு. வேலை செய்யும் வீட்டில் மீந்ததை முந்தியில் மறைத்துக் கொண்டுவரும் அம்மாக்களுக்காக

இன்னும் எத்தனை பிள்ளைகள் காத்திருக்கிறார்கள். இப்போதும் ஹோட்டல் வாசல்களில், சாலை ஓரங்களில் எச்சில் பொறுக்கித் தின்னும் மனிதர்களை, இயர் போனில் பேசிக்கொண்டு, எவ்வளவு இலகுவாகக் கடந்துவிடுகிறோம். பஃபே சாப்பாடுகள் கொட்டப்படும் தெருக்களில் பசியில் விழித்து இருப்பவர்கள் எத்தனை பேர்!

முன்பு திருவல்லிக்கேணி விநாயகா மேன்ஷனில் தங்கியிருந்தபோது, என் பக்கத்து ரூம்காரன் சசி. அவ்வப்போது ஏதாவது வேலை பார்ப்பான். திடுதிப்பென்று வேலை இல்லாமல், அறையிலேயே முடங்கிக்கிடப்பான். இருக்கிற காசுக்கு ரெண்டு பேருமாகப் பகிர்ந்து தின்று வாழ்ந்தோம். அங்கே இருந்து நான் வெளியேறிய சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் சசியைப் பார்க்கப் போனேன். அறையில் அழுக்குத் துணிகளுக்கு நடுவே சுருண்டு முனகிக் கிடந்தான். பதறிப்போய்த் தொட்டுப் பார்த்தால்… காய்ச்சல்.

“சசி… சசி… என்னாச்சு மாப்ள…?”

“சாப்பிடலை மச்சான்…”

“மதியம் சாப்பிடாம, அப்பிடி என்ன புடுங்கற வேலை உனக்கு…?”

“இல்லடா… மூணு நாளா சாப்பிடலை.”

எனக்கு பகீரென்றது. என் கையிலும் காசு இல்லை. ஏதோ கோபம். கழிவிரக்கம்… யாரிடமும் எதுவும் சொல்லாமல், மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறான். அவனை எழுப்பி இரவுச் சாப்பாட்டுக்குக் கொளத்தூரில் இருந்த என் அத்தை வீட்டுக்கு அழைத்துப் போனேன். அத்தை வீட்டில் சமைத்து முடித்து சாப்பிடக் கூப்பிடும் போது, “பரவாயில்லைங்க… போகும்போது பார்த்துக்குறோம்” என நெளிந்த சசியை இலையை நோக்கி நெட்டித் தள்ளினேன். சாப்பாடு, கூட்டு, பொரியல் என இலை முழுக்கச் சாப்பாடு. உட்கார்ந்து ஒரு வாய் அள்ளிவைத்தவன் கரகரவென அழ ஆரம்பித்துவிட்டான். எதுவும் புரியாமல் அத்தை பதற, தடாலென எழுந்து வெளியே ஓடி விட்டான். நான் பின்னாலேயே துரத்தி வந்தால், ரெட்டேரி பாலத்தில் நின்று தேம்பித் தேம்பி அழுகிறான்.

“வேணாம் மச்சான்… நா கௌம்பறேன். எனக்கு என்னவோ மாதிரியிருக்கு…”

“லூஸீப் பயயே… என்னாச்சுரா?”

“முதல்ல என்னை விடுறா…”

அத்தை வீட்டில் இருந்து கேரியரில் சாப்பாடு எடுத்து வந்து, மேன்ஷனில் அவனைச் சாப்பிடவைத்துவிட்டு வந்தேன். அந்த ஒரு வாய் சாப்பாடு அவனுக்கு… அம்மாவை, அப்பாவை, ஊரை, காதலியை, இழந்ததை, தவறுகளை, லட்சியத்தை… எதையெதையோ நினைவுபடுத்திவிட்டது. பசி ஏற்படுத்தும் அவமானத்தையும் வலியையும்விட வலியது வேறு இல்லை. பசியைத் தீர்ப்பது ஒரே ஒரு கனிதான்… ஆனால், அதற்காக நாம் கடப்பது ஒரு வனம்!

அதன் பிறகு, பெரிய நிறுவனம் ஒன்றில் சேல்ஸ்மேனாகச் சேர்ந்து எனக்கும் இன்னும் பலருக்கும் சில பல வருடங்களுக்கு சசிதான் சாப்பாடு போட்டான். இப்போது ஃபேஸ்புக் போட்டோவில் நியூஜெர்ஸியில் ஜெர்கினுடன் கார் ஓட்டியபடி சிரிக்கிறான்!

போன வருடம் தஞ்சாவூர் போயிருந்த போது, திலகர் திடலில் சர்க்கஸ் போட்டு இருந்தார்கள். சர்க்கஸீக்கு வந்திருந்த ஒட்டகச் சிவங்சி குட்டி ஒன்று சீரியஸாகி விட்டது. மாட்டு டாக்டரான நண்பனுடன் போயிருந்தேன். அந்த ஒட்டகச் சிவிங்கி மூக்கில் திரவமாக வழிய, சாவதற்காகவே படைக்கப்படும் செகண்ட் ஹீரோயின் மாதிரி கிடந்தது. சர்க்கஸ் முதலாளி பதற்றமாகப் பேசினார்.

“எவ்வளவோ சொன்னேன் சார். புரியாத பிரியாணில்லாம் வேணாம் வேணாம்னு… எம் பையன், அவன் ஒரு பிராந்து… சர்க்கஸை வளர்க்குறேனு இதுகளைக் கொண்டாந்தன். அம்மே, குட்டி ரெண்டையும் கொண்டாந்தான். இதுக என்ன சாப்புடும்… என்ன… ஏதுன்னு ஒரு மண்ணும் அறியல. புல்லு கில்லுனு என்ன போட்டாலும், மொனங்கிக்கிட்டே கெடக்கும். அம்மே ஒரு வாரத்துக்கெல்லாம் சாப்புடாமக்கொள்ளாம போய்ச் சேர்ந்துருச்சு. அது இருந்தாலாவது, இது எதாவது சாப்புடும்… இப்போ இதுக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு.”

அந்த ஒட்டகச் சிவிங்கிக் குட்டி பயங்கர பாவமாகப் பார்த்தது. அதன் கண்களில் ஏழு பிறவிகளுக்கான பசி உருண்டது. எந்த வனத்திலோ பிறந்து, இரைப்பை சுமந்து, தஞ்சாவூர் திலகர் திடலில் பசித்துக்கிடக்கும் பரிதாபத்தை அதற்கு அருளியது யார்? பசியும் ஆசையும் உயிர்களை ஒரே பாதையில் துரத்திக்கொண்டே இருப்பது ஏன்? அந்த இரவில் ஏராளமான கேள்விகள் கிளர்ந்து கொண்டே இருந்தன. இப்போது அந்த ஒட்டகச் சிவங்கி செத்துப் போய் இருக்கும். அதன் பசித்த ஆன்மா சர்க்கஸ் கம்பெனி யானைக்குள் புகுந்து, ஓனர் பையனை ஒருநாள் தூக்கிப் போட்டு மிதிக்கவும் கூடும்!

ஒரு வகையில், இன்றும் இவ்வுலகம் ஒரு சர்க்கஸ் கூடாரமாகவும் எளிய மனிதர்கள் ஒட்டகச் சிவிங்கிகளாகவும்தானே இருக்கிறார்கள்?

சோமாலியாவில் பசியால் சாகக்கிடக்கும் குழந்தையைத் தின்னக் காத்து இருக்கும் கழுகுக் காட்சியைப் புகைப்படம் எடுத்தவர், அந்தக் குற்ற உணர்விலேயே மன நலம் தவறித் தற்கொலை செய்து செத்துப்போனார். இதைப் பசியின் துர்சாபம் என்று சொல்லுங்கள்.

உலகின் ஆதி இனம்… விதைத்து, அறுத்து, உழைத்துத் தின்னும் கலாசாரத்தை உருவாக்கிய இனத்தை… முள் வேலி முகாம்களில், வதைக் கூடங்களில், நிலம் இழந்த துயரப் பரப்புகளில், பசியின் உதிரம் பெருகப் பெருக அலையவிட்ட வரலாற்றை எந்தச் சாபம் தண்டிக்கப்போகிறது?

“உங்கள் நண்பன்… உங்கள் சொந்தக்காரன்” என ராஜபக்ஷேவின் புகைப்படம் போடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டிக்கிடக்கும் யாழ் மண்ணில், இன்று பசியையும் வலியையும் தவிர, எதுவும் இல்லை. ஒருவேளை உணவுக்காக, திருட்டையும் விபசாரத்தையும் ஒரு வாழ்நிலத்தில் பரப்புகிறது அதிகார வர்க்கம்.

எனில், அதிகாரத்திற்கு எளியவர்களின் பசிதான் எப்போதுமே சாப்பாடு. ஆனால் தாய் முலை இழந்த ஒரு சிறுபிள்ளையின் பசி தீரவே தீராது. அது அதிகாரத்தை என்றேனும் ஒருநாள், கொன்று தின்றுதான் தன் பசியைத் தீர்த்துக்கொள்ளும் அதிகாரமே… அதனிடம் இருந்து நீ தப்பவே முடியாது!

ஒரு ரெஸ்டாரென்டில் சாப்பிடும் போது பக்கத்து டேபிளில் சாப்பிட்டு முடித்த ஒரு குடும்பம் சர்வரைக் கூப்பிட்டு “டாக் பார்சல்” என்றது.

அப்போதுதான் நான் அந்த வார்த்தையையே கேள்விப்பட்டேன். சாப்பிட்டு முடித்து மீதி இருந்தால் வீட்டில் உள்ள நாய்களுக்காம்… “டாக் பார்சல்”.

கொடுத்துவைத்த நாய்கள்.

இதைப் பார்த்துக்கொண்டு இருந்த நான், “ரெண்டு முட்டை பரோட்டா… லயன் பார்சல் பண்ணியிருங்கண்ணே…” என்றேன்.

“என்னங்க? லயன் பார்சலா?”

“ஆமா… என் ரூம்ய ரெண்டு சிங்கம் சாப்பிடாமக் கெடக்கு!”

About selvam4win

I am Selvam. I am very jolly person and frank one.

Posted on August 22, 2011, in Anandha Vikatan, Life, Thought, Uncategorized and tagged , , . Bookmark the permalink. Leave a comment.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: