Category Archives: Web
ஆனந்த விகடன் – அனிலாடும் முன்றில் – நா.முத்துக்குமார் – 06-07-2011
Downloadable link: http://tinyurl.com/vikatan-son
ஆனந்த விகடன் – அனிலாடும் முன்றில் – நா.முத்துக்குமார் – 06–07–2011
மகன்
அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.
வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே, சிறு வயதில் தன் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், தாயுடன் சென்று மகாகவி தாகூரை, அவர் நடத்தி வந்த சாந்தி நிகேதனில் சந்தித்து ஆசி பெறுவார். ஒரு முறை அப்படி வாழ்த்து பெற சந்திக்கையில், தாகூர் அவரிடம் ஒரு கவிதையை எழுதிக்கொடுத்தார். அந்தக் கவிதை…
“நான் உலகத்தின் பல நாடுகளுக்குச்
சென்று வந்திருக்கிறேன்
இந்த உலகில் உள்ள
மாபெரும் நதிகள், பறவைகள், அருவிகள்
எல்லாவற்றிலும் என் பாதம் பட்டிருக்கிறது.
ஆனால் என் மகனே
என் வீட்டுத் தொட்டத்திலுள்ள
புல்லின் நுனியில் உறங்கும்
பனித் துளியை மட்டும்
பார்க்கத் தவறிவிட்டேன்.”
கவிதையைக் கொடுத்துவிட்டு சத்யஜித்ரேவிடம் தாகூர் சொன்னார். “இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது இப்போது இந்தச் சிறு வயதில் உனக்குப் புரியாது. வளர்ந்த பின் எடுத்துப் படித்துப் பார். புரிந்தாலும் புரியாலும்.”
வருடங்களுக்குப் பிறகு அந்தக் கவிதையை மீண்டும் படித்த சத்யஜித்ரே, அதன் அக தரிசனத்தை உணர்ந்து “பதேர் பாஞ்சாலி” படம் எடுத்தார்.
என் அன்பு மகனே! உனக்கும் இதையே தான் சொல்கிறேன். பின் நாட்களில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப் பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.
என் பிரியத்துக்குரிய பூக்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க… மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
உலகிலேயே மிகப் பெரிய இன்பம் எது? தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. “தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்” என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டு இருந்தாய்.
நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழந்து, தலை நிமிர்ந்து, அந்த சாகசத்தைக் கொண்டாடினாய், தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கை விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசிர்வதித்தாய்.
என் பொம்முக்குட்டியே! இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.
என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரி்க்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தததித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.
என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார்.
எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. என் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக்கொண்டே இரு.
உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில்தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம்.
இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்துகொண்டு இருப்பாய்.
இதை எழுதிக்கொண்டு இருக்கையில் என் பால்ய காலம் நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் வீட்டுக் கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும். அதற்குப் பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை. அந்தக் கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்க கோடைக் காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.
வயதில் பேராற்றங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் என் கனவுகளை ஆசிர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். உன் உடல் எதிராகும். என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.
நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்துவைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.
கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு. யாராவது கேட்டால் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.
உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.
இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்கு சொல்ல நினைத்துச் சொல்பவை. என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் நீ உணர்வாய்.
நாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான்.
இப்படிக்கு,
உன் அன்பு அப்பா.
The Will To Win
The Will To Win
If you want a thing bad enough
To go out and fight for it,
Work day and night for it,
Give up your time and your peace and
your sleep for it
If only desire of it
Makes you quite mad enough
Never to tire of it,
Makes you hold all other things tawdry
and cheap for it
If life seems all empty and useless without it
And all that you scheme and you dream is about it,
If gladly you’ll sweat for it,
Fret for it, Plan for it,
Lose all your terror of God or man for it,
If you’ll simply go after that thing that you want.
With all your capacity,
Strength and sagacity,
Faith, hope and confidence, stern pertinacity,
If neither cold poverty, famished and gaunt,
Nor sickness nor pain
Of body or brain
Can turn you away from the thing that you want,
If dogged and grim you besiege and beset it,
You’ll get it!
— By Berton Braley